திருநெல்வேலி, செப். 22: சரியான திட்டமிடல் மற்றும் பயிற்சி இன்மையால் கணினிகள் காவல் நிலையங்களில் வெறும் காட்சிப் பொருளாக மாறிவிட்டன.
தமிழகக் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், காவல் நிலையங்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டன. காவல் நிலையங்களில் தினமும் நடைபெறும் நிகழ்வுகள், குற்றவாளிகளின் பின்னணி, குற்ற நிகழ்வுகளின் பின்னணி, முதல் தகவல் அறிக்கை (எப்.ஐஆர்.) பதிவு செய்வது, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புவது, உயர் அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெறுவது உள்ளிட்ட பல பணிகளைக் கணினிகள் மூலம் செய்வது என திட்டமிடப்பட்டது.
இதற்காக 2003-ம் ஆண்டில் இருந்து 2007 வரை படிப்படியாக ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கணினிகள் வழங்கப்பட்டன. இப்போது அனைத்து காவல் நிலையங்களுக்கும் கணினிகள் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கணினிகளைப் பயன்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஒரே நெட்வொர்க்கின் கீழ் கொண்டுவரும் வகையில் இணையதள வசதியும் உருவாக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 65 காவல்நிலையங்களில் 10 காவல்நிலையங்களில்கூட கணினிகள் செயல்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக கணினிகளைப் பயன்படுத்துவது குறித்து எந்தக் காவலருக்கும் முழுமையாக பயிற்சி அளிக்கப்படவில்லை. காவல் நிலையத்துக்கு கணினி வழங்கப்பட்ட பின்னர், ஒரு நாள்கூட பராமரிப்புப் பணி நடைபெற்றதில்லை எனக் கூறப்படுகிறது.
கணினிகள் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அதன்மூலம் 10 சதவிகிதப் பணிகள்கூட நடைபெறவில்லை.
இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் கணினிகள் நாளடைவில் பயன்படுத்த முடியாத நிலைக்குப் போய்விடும் என காவலர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, சில இடங்களில் இப்படி பிரச்னை இருப்பது உண்மைதான்; தொழில்நுட்பப் பிரச்னையில் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் இடர்ப்பாடு இருப்பதாகத் தெரிகிறது. உண்மை நிலை கண்டறிந்து கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.