முகப்பு
திருநெல்வேலி

காட்சிப் பொருளாக மாறிய "காருகுறிச்சி அருணாசலம்' சிலை

அம்பாசமுத்திரம், செப். 24: இசையுலகில் புகழ்பெற்று விளங்கிய நாகசுர வித்வான் "காருகுறிச்சி அருணாசலத்தின்' சிலை பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக உள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருகே உள்ள

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:44 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், செப். 24: இசையுலகில் புகழ்பெற்று விளங்கிய நாகசுர வித்வான் "காருகுறிச்சி அருணாசலத்தின்' சிலை பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக உள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருகே உள்ள காருகுறிச்சியை சேர்ந்த பலவேசம்- முப்புடாதி தம்பதியின் மகன் அருணாசலம்.

 கிராமிய கலைஞரான பலவேசம் அங்குள்ள பெருமாள் கோயிலில் நாகசுரம் வாசித்து வந்தார். தந்தையுடன் கோயிலுக்கு சென்றுவந்த அருணாசலமும் நாகசுரம் வாசிக்க தொடங்கினார்.

 இக்கிராமத்தில் கிராமியக் கலைஞர்கள் பலர் வசித்து வந்துள்ளனர்.

 இதேஊரைச் சேர்ந்த மற்றொரு அருணாசலமும் நாகசுரம் வாசிப்பாராம்.

 ஒரே ஊரில் இரு அருணாசலம் இருந்ததால், பெரிய அருணாசலம், சின்ன அருணாசலம் என இருவரும் அழைக்கப்பட்டனர்.

 பிற்காலத்தில் நாகசுரம் வாசிப்பதில் புகழ்பெற்று விளங்கிய சின்ன அருணாசலம், காருகுறிச்சி அருணாசலம் என அழைக்கப்பட்டார்.

 மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நாகசுரம் வாசித்தார் காருகுறிச்சி அருணாசலம்.

 அவரது வாசிப்பை ரசித்த இந்திராகாந்தி தனது தந்தை நேருவிடம், அருணாசலத்தை ஹிந்தி பாடல் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.

 காமராஜரிடம் தனது மகள் இந்திராவின் விருப்பத்தை நேரு தெரிவித்தார். காமராஜரின் வேண்டுகோளை ஏற்று காருகுறிச்சி அருணாசலம் ஹிந்தி பாடல் ஒன்று வாசித்தாராம். சிறப்பாக வாசித்த அருணாசலத்தை, தில்லிக்கு அழைத்து பிரதமர் நேரு, கேடயம் வழங்கி பாராட்டியதை இப்போதும் காருக்குறிச்சி கிராம மக்கள் நினைவு கூருகின்றனர்.

 இசையுலகில் புகழ் பெற்று விளங்கிய காருகுறிச்சி அருணாசலத்திற்கு 5 மகள்களும், ஒரு மகனும் உண்டு.

 நண்பர் திருமணத்தில் எழுந்த பிரச்னை காரணமாக அருணாசலம், காருகுறிச்சியில் இருந்து வெளியேறி கோவில்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும், அவரது புகழ் மறையவில்லை.

 காருகுறிச்சி பெயரை உச்சரித்ததும், அனைவரின் நினைவிலும் வருவது நாகசுர வித்வான் அருணாசலம் பெயர்தான்.

 அருணாசலத்தின் மகன் இறந்து விட்டார். அவரது 2 மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

 மற்றவர்கள் பழனி, திருநெல்வேலியில் உள்ளனர்.

 அருணாசலத்தின் நினைவாக காருகுறிச்சி கிராமத்தின் நுழைவாயிலில் 1993-ல், அமர்ந்த நிலையில் உள்ள அவரது சிலை நிறுவப்பட்டது.

 அந்த சிலை அருகில் தற்போது டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால், இரவு நேரத்தில் இச்சிலை குடிமகன்கள் பயன்படுத்தும் பாராக உள்ளது.

 பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி காணப்படும் இச்சிலை, வெறும் காட்சிப் பொருளாக மாறி வருகிறது. நாளைய தலைமுறையினருக்கு "காருகுறிச்சி அருணாசலத்தை' அடையாளம் காட்ட இச்சிலையை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →