ஆமை வேகத்தில் விளாத்துறை- மணக்குடி சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்
கருங்கல், ஏப். 25: விளாத்துறை- மணக்குடி சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் அப் பகுதியில் சாலை சீரமைப்புப் பணி மந்தமாக உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ள
கருங்கல், ஏப். 25: விளாத்துறை- மணக்குடி சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் அப் பகுதியில் சாலை சீரமைப்புப் பணி மந்தமாக உள்ளது.
எனவே பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக விளாத்துறை முதல் மணக்குடிவரை முன்சிறை, புதுக்கடை, கிள்ளியூர்,ஐரேனிபுரம், திக்கணம்கோடு,திங்கள்சந்தை, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம், புத்தன்துறை வழியாக சுமார் 35 கி.மீ. தொலைவுக்கு சாலை ஓரத்தில் ராட்சதக் குழாய் அமைக்கும் பணி கடந்த 2006-ல் துவங்கியது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் இந்த நீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடி நீர்த் திட்டம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 72 கடலோரக் கிராமங்கள், 17 பேரூராட்சிகள்,19 ஊரக குடியிருப்புகளுக்கு பெரிதும் பயன்பெறும் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தால் தினமும் 3,74,546 பேர் பயன் பெறுவர். இதற்கு செலவீட்டு மதிப்பு ரூ. 28 கோடியே 2 லட்சம் ஆகும்.
கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கும் பணி 14-6-2006-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இதற்கான வேலை துவங்கப்பட்டது.
இதன்படி 2009-ம் ஆண்டு ஏப்ரலில் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்ட காலத்திற்கு மேல் ஓராண்டு ஆகியும் இந்த பணி முடிவடையவில்லை.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தபோது இந்த சாலை சீரமைப்புக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு குடிநீர் வடிகால் வாரியம் கட்டவேண்டிய தொகையை இன்னும்கட்டி முடிக்கவில்லை என்றார்.
ஒரு சாலையை குடிநீர் சீரமைப்புக்காக தோண்ட வேண்டுமானால் அந்த சாலையின் மறுசீரமைப்புக்கு ஆகும் தொகை முழுவதையும் நெடுஞ்சாலைத் துறைக்கு, குடிநீர் வடிகால் வாரியம் கட்ட வேண்டும்.
இல்லை எனில் நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்மீது வழக்குத் தொடரலாம்.
ஆனால் சுனாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக தோண்டப்பட்ட இச்சாலை திட்டமிட்ட காலத்திற்கு மேல் ஓராண்டு ஆகியும் சரிசெய்யாமல் இருப்பதால் இச் சாலையில் பல விபத்துகள் ஏற்படுகின்றன.
சாலை அருகே இருக்கும் வீடுகளில் உள்ளவர்கள் காற்று மாசுபடுவதால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி மிகவும் அவதியுறுகின்றனர்.
இதுகுறித்து ச.ம.க மாவட்டச் செயலர் தியோடர் சாம் கூறியதாவது:
விளாத்துறை சுனாமி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தி இரண்டு முறை சாலைமறியலில் ஈடுபட்டு கைதானோம்.
மேலும் இப்பிரச்னை தொடர்பாக விளாத்துறை முதல் அம்மாண்டிவிளை வரை கறுப்புக்கொடி கட்டும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
இயற்கை நண்பர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கிளாட்சன் கூறும்போது, இப்பணியினை வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, பல பகுதிகளில் குழாய்களிலிருந்து குடிநீர் கசிந்து வீணாகிறது.
எனவே அப்பணி முடிவடைந்தவுடன் மீண்டும் சாலை சீரமைக்கும் பணி துவங்க உள்ளதாக தெரிவித்தனர்.
எனவே இப்பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் இப்பணியை செய்து முடிக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.