வெள்ளநீர் கால்வாயில் தரை நிலை மதகு: கலக்கத்தில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள்
அம்பாசமுத்திரம், டிச. 11: வெள்ளநீர் கால்வாயில் உபரி நீரை வெளியேற்றும் வகையில் தரை நிலை மதகு (ஷட்டர்) அமைக்கப்படுகிறது. இதனால், பாசனம் பாதிக்கப்படும் என கன்னடியன் கால்வாய் விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்த
அம்பாசமுத்திரம், டிச. 11: வெள்ளநீர் கால்வாயில் உபரி நீரை வெளியேற்றும் வகையில் தரை நிலை மதகு (ஷட்டர்) அமைக்கப்படுகிறது. இதனால், பாசனம் பாதிக்கப்படும் என கன்னடியன் கால்வாய் விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை வறட்சிப் பகுதிக்கு வழங்கும் வகையில் தாமிரபரணி ஆறு, கோரையாறு, எலுமிச்சையாறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு ஆகிய 6 நதிகளை இணைத்து ரூ. 369 கோடியில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கன்னடியன் கால்வாயில் இருந்து எம்.எல். தேரி வரை 73 கி.மீ தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாகும் 13,800 மில்லியன் கன அடி உபரி நீரில் இருந்து 3,000 மில்லியன் கன அடி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி விடமுடியும். இதன் மூலம் 23,040 ஹெக்டேர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்னையும் தீரும்.
இந்த திட்டத்துக்காக மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் நீர் சந்திக்கும் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து 6.5 கி.மீ தொலைவுக்கு கன்னடியன் கால்வாய் அகலப்படுத்தப்படுகிறது. வெள்ளநீர் கால்வாயில் 3680 கனஅடி நீரைக் கடத்தும் திறன் கொண்ட வகையில் கன்னடியன் அணைக்கட்டில் ஒரு மீட்டர் உயரத்துக்கு அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீவைகுண்டம் பகுதி விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், 70 மீட்டர் நீளத்தில் மட்டும் அணைக்கட்டின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் மலையில் இருந்து கிடைக்கும் நீரூற்று வெள்ளநீர் கால்வாயில் செல்கிறது.
இதனால், மானாவாரி குளங்களுக்கு நீர்வரத்து இல்லை. பருவ மழை பெய்த போதிலும் இக்கால்வாய் பாசனத்தில் வெள்ளங்குழி, வீரவநல்லூர், காருக்குறிச்சி, சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல் பகுதியில் வீற்றிருந்தான்குளம், புறக்கால்குளம், கரடிக்குளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களுக்கு நீர்வரத்து குறைந்ததால் குளங்கள் நிரம்பவில்லை.
வெள்ளங்குழியில் கன்னடியன் கால்வாயை இணைக்கும் இடத்தில் வெள்ளநீர் கால்வாயில் இருந்து உபரி நீரை கடத்தும் (வெளியேற்றும்) வகையில் தரை நிலையில் மதகு (ஷட்டர்) அமைக்கப்படுகிறது. வெள்ளநீர் கால்வாயில் தரை நிலையில் மதகு அமைப்பதால் பாசனம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கன்னடியன் கால்வாய் விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
தரை நிலை மதகு அமைப்பதால் வெள்ளம் ஏற்படாத காலங்களிலும் இக்கால்வாயில் தண்ணீர் வழங்கும் நிலை உருவாகும். அவ்வாறு வழங்கினால் கன்னடியன் கால்வாய் பாசனம் பாதிக்கப்படும்.
எனவே, வெள்ளநீர் கால்வாயில் உபரி நீரை மட்டும் வழங்கும் வகையில் 3 அடி உயரத்தில் மதகு அமைக்க வேண்டும். மானாவாரி குளங்களுக்கு நீர்வரத்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
"அச்சம் வேண்டாம்'
தரைநிலை மதகு அமைக்கப்படுவது குறித்து வெள்ளநீர் கால்வாய் திட்ட (நம்பியாறு நீர்த்தேக்கத் திட்டக் கோட்டம்) செயற்பொறியாளர் எஸ். சுப்பையா கூறியதாவது:
கன்னடியன் கால்வாயில் வெள்ளங்குழியில் ஏற்கெனவே உள்ள மதகைப் போலதான் வெள்ளநீர் கால்வாயிலும் உபரி நீரை கடத்தும் வகையில் தரை நிலை மதகு அமைக்கப்படுகிறது. இதனால், பாசனம் பாதிக்கும் என்ற அச்சம் வேண்டாம்.
இந்த திட்டப்படி வெள்ளநீர் கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்த பின்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கலந்து ஆலோசித்து, வெள்ளம் ஏற்படும் காலங்களில் மட்டும் உபரி நீரை வழங்கும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு வறட்சிப் பகுதிக்கு உபரி நீர் வழங்கப்படும்.
எந்த வகையிலும் பாசனம் பாதிக்காத வகையில் திட்டம் நிறைவேற்றப்படும். எனவே, விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார் அவர்.