கடையநல்லூர் நகராட்சியில் புதிய சாலைகள்: ரூ. 1 கோடி வீணாகும்?
கடையநல்லூர், பிப். 12: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார், சிமெண்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், புதிய குடி
கடையநல்லூர், பிப். 12: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார், சிமெண்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில், புதிய குடிநீர்த் திட்டத்திற்கான தீர்மானமும் நகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத் திட்டத்திற்காக பகிர்மானக் குழாய்களை சீர் செய்யும்போது புதிதாகப் போடப்படும் சாலைகள் சேதமடையக்கூடும்.
இதனால், மக்கள் பணம் ஒரு கோடி ரூபாய் வீணாகும் என அஞ்சப்படுகிறது.
கடையநல்லூர் நகராட்சி 2 ஆவது வார்டிலுள்ள - கற்பகசுந்தர விநாயகர் கோயில் தெரு, மிட்டா ஆபிஸ் தெருக்களில் ரூ.5.20 லட்சத்தில் தார்ச்சாலையும், 3 ஆவது வார்டிலுள்ள - கிருஷ்ணாபுரம் திலகர் தெருவில் ரூ.6 லட்சத்தில் தார்ச்சாலையும், 4 ஆவது வார்டிலுள்ள பூந்தோட்டத் தெரு, புலவர் தெரு, ஓடைத்தெரு, பாரதியார் தெரு, செவல்விளைத்தேவர் தெருக்களில் ரூ.15.45 லட்சத்தில் தார்த்தளமும், 6 ஆவது வார்டிலுள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோயில் தென்வடல் தெருவில் ரூ.4.90 லட்சத்தில் தார்த்தளமும் போடப்படவுள்ளன.
மேலும், 7 ஆவது வார்டிலுள்ள வடக்குவாச்செல்வி அம்மன் கோயில் பகுதியில் ரூ.75,000 மதிப்பில் சிமெண்ட் சாலையும், 9 ஆவது வார்டிலுள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் பெரிய தெருவில் ரூ.3.40 லட்சத்தில் சிமெண்ட் தளமும், 13 ஆவது வார்டிலுள்ள இக்பால் தெற்கு, வடக்கு தெரு, காயிதேமில்லத் தெருக்களில் ரூ.10.85 லட்சத்தில் சிமெண்ட் தளமும், 18, 20 ஆவது வார்டிலுள்ள தெற்கு அய்யாபுரம், அட்டைக்குளம் ஊரணிப் பகுதிகளில் ரூ.3.80 லட்சத்தில் தார்ச்சாலையும், 21, 22 ஆகிய வார்டுகளிலுள்ள மேலக்கடையநல்லூர் காளியம்மன் கோயில் தெரு, வேதக்கோயில் தெருக்களில் ரூ.5.30 மதிப்பீட்டில் சாலையும், 28 ஆவது வார்டிலுள்ள பேட்டை, புதுமனை தெற்குத்தெருக்களில் ரூ.2.60 லட்சத்தில் சிமெண்ட் சாலையும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 32 ஆவது வார்டு ரஹ்மானியாபுரம் 3, 6, 7 ஆவது தெருக்கள் மற்றும் ஜாவியா தென்வடல் தெருக்களில் ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலையும், 33 ஆவது வார்டிலுள்ள மேற்கு மலம்பேட்டை தென்வடல் தெருவில் ரூ.4.90 லட்சத்தில் தார்ச்சாலையும்,
11 ஆவது வார்டிலுள்ள மாவடிக்கால் பிள்ளையார்கோவில் வடக்குத் தெருவில் ரூ.1.60 லட்சத்தில் தார்ச்சாலையும், 22 ஆவது வார்டில் ரூ.13 லட்சத்திலும், 26 ஆவது வார்டில் ரூ.2.70 லட்சத்திலும், 29,30,31 வார்டுகளில் ரூ.4.85 லட்சத்திலும் தார்ச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக சாலைகள் தோண்டப்பட்டதாலும், மழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்து இருப்பதாலும், நகராட்சி வருவாய் தலைப்பு நிதியின் கீழ் மேற்கண்ட பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூ.21.41 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்:
இதனிடையே, கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பகிர்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டு 36 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாலும், சில இடங்கள் மேடு, பள்ளமாக இருப்பதாலும் நகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலையுள்ளது.
எனவே, குடிநீர் விநியோக அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தேவையான இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைத்தும், புதிய குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் வீணாகும் அபாயம்:
ஏற்கெனவே, குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கவே, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், புதிய குடிநீர்த் திட்டத்தில் மேடு, பள்ளங்களை சரி செய்து புதிதாக பகிர்மானக் குழாய்கள் பதிக்கப்படவுள்ளதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பகிர்மானக் குழாய்கள் பதிக்க சாலைகள் மீண்டும் தோண்டப்படும்.
இதனால், புதிய சாலைகள் மீண்டும் சேதமடையும். மக்கள் பணம் ஒரு கோடி ரூபாயும் வீணாகும்.
எனவே, புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்திய பின்னர் இந்த சாலைகளை அமைக்க வேண்டும் என இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆணையர் விளக்கம்
இது தொடர்பாக கடையநல்லூர் நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப் கூறியதாவது:
புதிய குடிநீர்த் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் பணிகள் தொடங்க சில காலங்கள் ஆகலாம்.
அதே நேரம் புதிய சாலைகள் அமைக்கவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிதாக போடப்படும் சாலைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
அல்லது குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர் அப்துல் லத்தீப்.