கடலரிப்பால் கலங்கி நிற்கும் மீனவ கிராமங்கள்
வள்ளியூர், பிப்.21: திருநெல்வேலி மாவட்ட கடற்கரைக் கிராமங்களில் கடலரிப்பு மற்றும் கடல் சீற்றத்திலிருந்து மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர திட்டங்கள் செயல்வடிவத்துக்கு வராததால், மீனவ கிராம மக்கள் கலங்கிப்
வள்ளியூர், பிப்.21: திருநெல்வேலி மாவட்ட கடற்கரைக் கிராமங்களில் கடலரிப்பு மற்றும் கடல் சீற்றத்திலிருந்து மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர திட்டங்கள் செயல்வடிவத்துக்கு வராததால், மீனவ கிராம மக்கள் கலங்கிப் போய் நிற்கின்றனர்.
சுனாமிக்குப் பின் இம் மாவட்ட மீனவ கிராமங்களில் ஆழிப்பேரலையிலிருந்து மீனவர்களைப் பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீனவ மக்களின் குற்றச்சாட்டு.
ராதாபுரம் வட்டத்தில் கடற்கரை கிராமங்கள் அதிகம் உள்ளன. கூடுதாழை, கூட்டப்பனை, தோமையார்புரம், ஜார்ஜ்நகர், மிக்கேல்நகர், உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பஞ்சல், பெருமணல் உள்ளிட்ட கடற்கரைக் கிராமங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்த கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இப் பகுதியில் மீன்பதப்படுத்தும் கூடம், மீன்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வசதி, கடல் சீற்றம் குறித்து தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.
2004, டிசம்பர் மாதம் சுனாமி பேரலையில் சிக்கி இப் பகுதி மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.
உடைமைகள், மீன்பிடி உபகரணங்களை இழந்து தவித்த இவர்களுக்கு அரசும், சமூகநல அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி உணவு, வீடு, மீன்பிடி உபகரணங்களை வழங்கியது. இருப்பினும், தங்களைப் பாதுகாக்க அரசு நிரந்தரமான செயல்திட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்பது மீனவ மக்களின் ஆதங்கம்.
சுனாமிக்கு பிறகு அடிக்கடி ஏற்படும் இயற்கையின் மாறுபாடுகள் திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை.
கடல் அலையின் சீற்றம் மற்றும் கடலரிப்பால் இப் பகுதி கடற்கரைகள் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.
இதனால் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளதுடன் குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுந்துவிடுகிறது.
உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி பகுதிகளில் கடற்கரைகளில் அமைக்கப்பட்டிருந்த வலை சரிபார்ப்புக் கூடங்கள், படகுகளை நிறுத்திவைக்கும் இடங்கள் கடலரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் கடல்நீர் புகுவதால் கட்டடங்களும் சேதமடைகின்றன.
எனவே, இப் பகுதிகளில் கடலரிப்பு தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
""கடலரிப்பிலிருந்து கடற்கரை கிராமங்களைப் பாதுகாக்க தாற்காலிக ஏற்பாடுகளை அரசு செய்தாலும், அது போதிய பலன் அளிப்பதில்லை.
எனவே, இதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தரமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார் உவரி ஊராட்சி மன்றத் தலைவர் அந்தோனி.