திருநெல்வேலி

"தென் மாவட்டங்களில் 19 பொறியியல் கல்லூரிகள் தகுதியற்றவை'

திருநெல்வேலி, ஆக. 26: தென் மாவட்டங்களில் உள்ள 19 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்  "பொறியியல் பாடங்களை நடத்த தகுதியற்றவை' என திருநெல்வேலி அண்ணா  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.  இந்த பொறியியல

ப. இசக்கி

திருநெல்வேலி, ஆக. 26: தென் மாவட்டங்களில் உள்ள 19 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்  "பொறியியல் பாடங்களை நடத்த தகுதியற்றவை' என திருநெல்வேலி அண்ணா  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.

 இந்த பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணைப்பை புதுப்பித்துக்  கொள்ளாவிட்டால் சுமார் 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ள பொறியியல்  கல்லூரிகள் அனைத்தும் ஆண்டுதோறும் இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இணைப்பை புதுப்பித்துக் கொடுக்க பல்கலைக்கழகங்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.

 திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படி முக்கியமாக, கல்லூரிகளில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பி.எச்.டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர், 15 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வக வசதி (பாடத்தை நடத்துவதற்கேற்ற  செய்முறை கருவிகள் மற்றும் கணினிகளுடன்), நூலகம், விடுதி வசதி, மாணவர்களுக்கு  மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

 இணைப்பை புதுப்பிக்க பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவுடன் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர்  கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்து ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்களை  வழங்குவர். நான்கு ஆண்டுகளை கடந்த கல்லூரிகள் 70 மதிப்பெண்களைப் பெற்றிருக்க  வேண்டும். மற்ற கல்லூரிகள் 65-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதில், 70-க்கும்  அதிகமான மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகளுக்கு உடனடியாக இணைப்பு புதுப்பித்து  கொடுக்கப்படும். 65 முதல் 70-க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ள கல்லூரிகளில்  காணப்படும் சிறு குறைபாடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்துகொள்ள  வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு புதுப்பித்துக் கொடுக்கப்படும்.

 அந்தக்  கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல்  தெரிவிக்க வேண்டும். அதற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ள கல்லூரிகள் அந்தக் குறைபாட்டை முழுவதுமாக நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக குழுவினர் மீண்டும் அந்த கல்லூரிகளை  ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இணைப்பு  புதுப்பிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

 திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களிலும்  தற்போது 68 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஓர் அரசுக் கல்லூரி, பல்கலைக்கழக  கல்லூரிகள் 2 என மொத்தம் 3 கல்லூரிகள் தவிர, எஞ்சிய 65-ம் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.

 இவற்றில் 21 கல்லூரிகள் மட்டுமே 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளன. அவற்றுக்கு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். மேலும் 25 கல்லூரிகளில்  உள்ள சிறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை செப்டம்பர் முதல்  வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.

 எஞ்சிய 19 கல்லூரிகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.  அதிலும் சில கல்லூரிகள் 20-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.  இவற்றில் 9 கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 7 கல்லூரிகள் திருநெல்வேலி  மாவட்டத்திலும், 2 கல்லூரிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு கல்லூரி  விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளன.

 திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பு பெற்றதாகக் கூறப்படும் சில கல்லூரிகளும் இவற்றில் அடக்கம்.

 ஐம்பதுக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ள 19 கல்லூரிகளிலும் முக்கியமான குறைபாடாக இருப்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வகங்கள்  இல்லாமல் இருப்பதுதான். சில கல்லூரிகளில் பி.இ. மட்டும் படித்தவர்களை ஆசிரியர்களாக வைத்துள்ளனர். ஆய்வகங்களில் தேவையான கருவிகளும், எண்ணிக்கையிலும்  இல்லாமலும் உள்ளன.

 இந்த கல்லூரிகளுக்கெல்லாம் அவற்றில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு  அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். குறைபாடுகளை நிவர்த்தி செய்துவிட்டு  பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்தால் மீண்டும் பல்கலைக்கழக குழுவினர் அந்தக்  கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி விதிமுறை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால்  இணைப்பு புதுப்பிக்கப்படும்.

 கடந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர்  செல்லும்போது வேறு கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களை தாற்காலிகமாக அழைத்து  வந்து கணக்கு காட்டி சரிசெய்து கொள்வதுண்டு. அதுபோல்தான் ஆய்வக கருவிகளும்.  ஆனால், தற்போது திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகமானது ஆசிரியர்களின்  வருகைப் பதிவேட்டை "பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்து வருகிறது. எனவே,  இந்தப் பல்கலைக்கழக ஆளுகைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இருந்தோ  அல்லது பாலிடெக்னிக் போன்ற இதர கல்வி நிறுவனங்களில் இருந்தோ ஆசிரியர்களை வரவழைத்து கணக்கு காட்டும் வழியை கல்லூரிகள் கையாளலாம் என கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய ஆசிரியர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்பதால்  மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

 திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில்  இந்தக் கல்வியாண்டில் சேர்ந்துள்ள சுமார் 13,000 மாணவர்களில் சுமார் 4,000  மாணவர்கள் இந்த "தகுதியற்ற' 19 கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். எனவே, இந்தக்  கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்து பல்கலைக்கழக இணைப்பை பெற்றுக்  கொள்ளாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 அதுமட்டுமன்றி பெற்றோர்களும், மாணவர்களும் இத்தகைய பொறியியல் கல்லூரிகளை அடையாளம் கண்டு அவற்றில் சேருவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்  கல்வியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT