திருநெல்வேலி, பிப். 21: திருநெல்வேலியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் முன்பதிவு செய்யாமல் மருத்துவர்களை விரைவாகப் பார்ப்பதற்கு நோயாளிகளிடம் "தத்கால்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மக்கள் அதிகமாக நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். சுகாதாரம், நல்ல சிகிச்சை ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக இருப்பதாக மக்கள் கருதுவதே இதற்குக் காரணம்.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வரைமுறையின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு நோய் கொடுக்கும் வேதனையைவிட, இந்த மருத்துவமனை கட்டணம் கொடுக்கும் வேதனையே அதிகம்.
அண்மைக்காலமாக திருநெல்வேலியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் சற்று வித்தியாசமான முறையில் நோயாளிகளிடம் பணத்தைப் பறித்து வருகின்றன. இதுவரை சிகிச்சை பெறுவதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் கட்டணத்தை செலுத்திய மக்கள், இப்போது புதிதாக ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.
இக் கட்டணம் விரைந்து மருத்துவரைச் சந்திப்பதற்காக வசூலிக்கப்படுகிறது. ரயிலில் கடைசி நேரத்தில் இருக்கை பெறுவதற்காக "தத்கால்' முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது போன்று, கடைசி நேரத்தில் மருத்துவரைச் சந்திக்க முற்படும்போது, அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தினால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்கிறது.
மருத்துவமனையில் அவசர நோயாளியாக சேர முற்பட்டாலும் இந்த தத்கால் முறையில், அவர்களிடம் தனியாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தத்கால் முறையில் அதிகமான பேரை அனுமதிப்பதால், ஏற்கெனவே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கு முறைப்படி முன்பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
நோயின் பாதிப்பு அதிகமான ஒருவர் முறைப்படி மருத்துவரைச் சந்திக்க பதிவு செய்திருந்தாலும், இந்த தத்கால் முறையில் பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் நோயின் வேதனை மட்டுமன்றி, மனவேதனையுடனும் காத்திருக்க வேண்டியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் யாராவது கேட்டால், அவர்களிடமிருந்து முறையான பதில் கிடைப்பது இல்லை. மாறாக, விருப்பம் இல்லையென்றால், வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்ற பொறுப்பற்ற பதிலே கிடைப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் இந்தச் செயல்களால், நல்ல சிகிச்சை பெற முடியும் என அங்கு நம்பி வரும் நோயாளிகளுக்கு தொடக்கமே வேதனை மிகுந்ததாக உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததால், இப்படி விதவிதமாக கட்டணத்தை வசூலிக்கும் உத்தியை மருத்துவமனை நிர்வாகங்கள் கடைப்பிடிக்கின்றன. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.