திருநெல்வேலி, ஜன. 17: திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள திரையரங்குகள், வரைமுறையின்றி கட்டணத்தை உயர்த்தி வருவதால், சினிமா ரசிகர்கள் திருட்டு டி.வி.டி.யை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது.
நெல்லை மாநகரில் 10 திரையரங்குகள் உள்ளன. இந்தத் திரையரங்குகளில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சினிமா ரசிகர்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் கட்டணம் வரைமுறையின்றி உயர்த்தப்படுகிறது.
பொங்கலையொட்டி 4 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவை, 6 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. அனைத்துத் திரையரங்குகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.30 டிக்கெட் ரூ. 100 வரை விற்கப்படுகிறது. இதேபோல ரூ. 50 டிக்கெட், ரூ.200 வரை விற்கப்படுகிறது. சில திரையரங்குகளில் அன்றைய கூட்டத்துக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்படுகிறது
இக் கட்டண உயர்வால், சினிமா ரசிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். கட்டண உயர்வு தெரியாமல், குடும்பத்தோடு ஒரு ரசிகர் சினிமா பார்க்க வந்தால் அவர் நிலைமை பரிதாபம்தான். குறைந்தது அவருக்கு டிக்கெட்டுக்கு மட்டும் ரூ.500 ல் இருந்து ரூ.1000 வரை செலவாகிறது.
அரசு அறிவித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும், திரையரங்குகளில் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது பல ஆண்டுகளாக நீடித்து வந்தாலும், அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இது வரை அதிக கட்டணம் வசூல் செய்யும் திரையரங்குகள் மீது பெயரளவுக்கு கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
திரையரங்குகளிலும் கிடைத்த வரை லாபம் என்ற நோக்கில், அரசின் அனைத்து விதிமுறைகளையும் மீறி மனம்போல கட்டணத்தை உயர்த்தப்படுகின்றன.
கட்டணத்துக்குப் பயந்தே திரையரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது. இதனால், திரைப்படம் நன்றாக இருந்தாலும்,சில வாரங்களிலே திரையரங்குகளில் இருந்து மாற்றப்படுகின்றன.
ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகளால் சினிமா துறை நலிந்து வரும் நிலையில், திரையரங்குகளின் இத்தகைய நடவடிக்கையால் மேலும் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறது. ஆனால், இதை திரையரங்கு உரிமையாளர்களும் உணரவில்லை, அரசும் உணரவில்லை என்றே கூற வேண்டும்.
இந்த நிலையில், திரைக்கு வந்து சில நாள்களே ஆன திரைப்படங்களின் டி.வி.டி. விறுவிறுப்பாக விற்கப்படுகின்றன. இப்போது ரூ.25-க்கும் டி.வி.டி. கிடைப்பதாகக் கூறப்படுகிறது. திருட்டு டி.வி.டி. விற்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என அரசு கூறி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இம் மாநகரில் திருட்டு டி.வி.டி. விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. திரையரங்குகளின் அடாவடியான கட்டண உயர்வு,திருட்டு டி.வி.டி.க்களின் விலை குறைவு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளுக்கு விடை கொடுத்து வருகின்றனர். இதனால் முழுமையாகப் பாதிக்கப்படுவது சினிமாத்துறையும், திரையரங்குகளும்தான். சினிமாதுறை திருட்டு டி.வி.டி.க்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், திரையரங்குகளில் கட்டண உயர்வு குறித்து பேசுவதில்லை.
ஆனால், இவை அனைத்தையும் கட்டுப்படுத்த அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.