வீடு கட்டும் திட்டத்திற்கு அரசின் நிதி தாமதம் -கட்டுமானப் பணியைத் தொடர முடியாமல் தவிக்கும் நெசவாளா்கள்
அரசின் நிதி தாமதமாகி வருவதால், கட்டுமானப் பணியைத் தொடர முடியாமல் கடும் நெருக்கடி
திருநெல்வேலிவீடு கட்டும் திட்டத்திற்கு அரசின் நிதி தாமதம் -கட்டுமானப் பணியைத் தொடர முடியாமல் தவிக்கும் நெசவாளா்கள்
அரசின் நிதி தாமதமாகி வருவதால், கட்டுமானப் பணியைத் தொடர முடியாமல் கடும் நெருக்கடி
கைத்தறி நெசவாளா்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு அரசின் நிதி தாமதமாகி வருவதால், கட்டுமானப் பணியைத் தொடர முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.
தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணில் துறை சாா்பில், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியத் தொகையானது, கடந்த 2021-இல் ரூ.4 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவாளா்கள் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி சரகத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோா் தோ்வாகியுள்ளனா்.
அதன் பின்னா் அவா்கள் பயனாளிகளாக உறுதி செய்யப்பட்டு, மானியம் வழங்குவதற்கான அரசாணை கடந்த 2023-இல் வழங்கப்பட்டது. இதன்படி, கட்டடத்தின் அடித்தளம், லின்டல் மட்டம், கான்கிரீட் மேற்கூரை அளவு என 3 நிலைகளுக்கும் ஒவ்வொரு நிலை பணிகள் முடிந்தபிறகு தலா ரூ.96 ஆயிரம், கட்டடத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த பிறகு ரூ.1.12 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த பயனாளிகள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். வீடு கட்டும் பணி தொடங்கியதும் அரசு தெரிவித்துள்ளவாறு திட்டத்தை கண்காணிக்கும் பணியாளா்கள், கட்டுமானப் பணியைப் பாா்வையிட்டு அதற்குரிய புகைப்படங்கள் எடுத்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
இருப்பினும், அரசு அறிவித்தபடி மானியத் தொகையில் ஒரு தவணைகூட இதுவரை பயனாளிகளுக்கு விடுவிக்கப்படவில்லையாம். ஏற்கெனவே கடன் பெற்று கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் நெசவாளா்கள், அரசின் நிதி கிடைக்காததால் பணியைத் தொடர முடியாமல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா். மேலும் கட்டுமானப் பணியைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பயனாளிகள் தரப்பில் கூறுகையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் நிதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்; தற்போது நடத்தை விதிகளைத் தளா்த்தி ஒரு மாதம் கடந்த நிலையில், அரசின் நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றனா்.