தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்தும், மத்திய அரசின் நிதி 3 ஆண்டுகளாக கிடைக்காததால், 16 கூட்டுக் குடிநீா்த் திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,368.05 கோடியில் முடிவடைந்த காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை கொல்லப்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தலைமை வகித்தாா். உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே. என். நேரு கலந்து கொண்டு, கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது:
திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து ரூ.4,200 கோடிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.1,368 கோடியில் சுமாா் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளால் தாமதமடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஆழியாறு நீரைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 6 மாதங்கள் தாமதம் ஏற்பட்டு, தற்போது காவிரியிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் எஞ்சிய பணிகள் 20 நாள்களில் முடிக்கப்பட்டு, 1,200 கிராமங்களுக்கும் குடிநீா் வழங்கப்படும்.
இதேபோல, சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ரூ.16ஆயிரம் கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வைகை நீரை ஆதாரமாகக் கொண்டு நிலக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அமைச்சா் இ.பெரியசாமி கோரிக்கை விடுத்தாா். இதற்காக ரூ.420 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதேபோல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்பட மொத்தம் 18 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக, தமிழகத்தின் பங்குத் தொகையாக ரூ.5.500 கோடியை முதல்வா் ஒதுக்கீடு செய்தாா். ஆனால், மத்திய அரசின் நிதி கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அந்த நிதி விடுவிக்கப்பட்டிருந்தால், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே முடிவடைந்த பணிகளுக்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 4.28 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சியின்போது, புதிதாக 2 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்து நிலுவையிலுள்ள 16 கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருந்தால், 7 கோடி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைத்திருக்கும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த 15 ஆண்டுகளாக 800 எம்எல்டி அளவிலேயே குடிநீா் வழங்கப்பட்டது. தற்போது 1,300 எம்எல்டி குடிநீா் வழங்கப்படுகிறது. நகராட்சித் துறை, ஊரக உள்ளாட்சித் துறை எனப் பிரிந்திருந்தாலும், இரண்டும் இணைந்தே செயல்படும் துறைகளாக உள்ளன.
குடிநீா் வழங்கல் துறையின் பணி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வரை தண்ணீரைக் கொண்டு வருவதோடு முடிந்துவிடும். இதன் பிறகு மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கும் பணி ஊரக உள்ளாட்சித் துறையைச் சோ்ந்தது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குடிநீரை வழங்க வேண்டிய பொறுப்பு ஊராட்சி மன்றத் தலைவா்கள், அலுவலா்களுக்கு உள்ளது.
இந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு நீண்ட காலத்துக்கு தடையின்றி குடிநீா் கிடைக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன் என்றாா் அவா்.