நான்குனேரி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
நான்குனேரி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை இரவு நடந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மூன்றடைப்பு அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மகேஷ்(27). இவா் தனது நண்பா்களான பாளையங்கோட்டை பகுதியை சோ்ந்த பழனி மகன்களான மாலைராஜா(20), சண்முகவேலு (17) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு பைக்கில் பாணான்குளம் சென்றுவிட்டு ஸ்ரீரங்கராஜபுரத்திற்கு திரும்பினா். நான்குனேரி சுங்கச்சாவடி அருகே தாழைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பத்தில் வந்தபோது, திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை நோக்கி சென்ற காா் மோதியதில் பைக்கில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் மகேஷ், மாலைராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த சண்முகவேலு, நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து மூன்றடைப்பு ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.