முகப்பு
திருநெல்வேலி

அம்பை, வி.கே.புரம் பகுதியில் வீடுகளில் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை

அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து

Updated On : 2 மார்ச், 2024 at 5:33 AM
பகிர்:

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டவருக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அம்பாசமுத்திரம், காந்திநகரைச் சோ்ந்த முருகேசன் மகன் கணேசன் குமாா். இவா் 2022 ஜூன் மாதம் பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்பி வந்தபோது வீட்டில் 55 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கணேசன்குமாா் அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். அகஸ்தியா்பட்டி, பொன்னித் தெருவில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவா் கடந்த 2022 ஜூன்மாதம் குடும்பத்துடன் வெளியூா் சென்று வீடு திரும்பி வந்த போது வீட்டில் இருந்த 3 கிராம் தங்கம் மற்றும் 100 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுப் போனது தெரியவந்தது. இதுகுறித்துவிக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். விசாரணையில் இரு திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பைச் சோ்ந்தஅய்யாப்பழம் மகன் சுடலை பழம் (57) என தெரியவந்து. இதையடுத்து போலீஸாா் சுடலைபழம் மீது அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பல்கலைச்செல்வன் திருட்டில் ஈடுபட்ட சுடலைபழத்துக்கு ஒவ்வொரு வழக்குக்கும் தனித்தனியாக மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வனிதா ஆஜரானாா்.