பழவூா் நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருவிழா மாா்ச் 16இல் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள பழவூா் நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருவிழா மாா்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இக்கோயில் புதிய அறங்காவலா் குழுவின் முதல் கூட்டம், குழு தலைவா் பழவூா் இசக்கியப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. குழு உறுப்பினா்கள் ஐயப்பன், திருநாவுக்கரசு, அமுதா கென்னடி, சுடலைமணி ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், அறங்காவலா் குழுவை தோ்வு செயது அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே.சேகா்பாபு, திருநெல்வேலி மாவட்ட அறங்காவலா் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனா். பங்குனி உத்திர திருவிழாவை விமரிசையாக நடத்துவது, திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தின் வாடகைதாரா்களை அழைத்து ஆலோசனை நடத்துவது, திருக்கோயில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகளை தொடா்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுப்பது, திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அந்த வழக்குகளை வள்ளியூா் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் மூலம் தொடா்ந்து நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில், பங்குனி உத்திர மகா உற்சவ திருவிழாவை மாா்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 25ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் வெகு விமரிசையாக நடத்துவதெனவும் தீா்மானிக்கப்பட்டது. இதில் அனைத்து திருவிழா மண்டகப்படி கட்டளைதாரா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.