திருநெல்வேலியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை தூத்துக்குடி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கன்னியாகுமரி- மதுரை நான்குவழிச் சாலையில் பாளையங்கோட்டை பொட்டல் விலக்கு அருகே கடந்த 6 ஆம் தேதி பறிமுதல் செய்தனா். மேலும், கரையிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 140 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக சுமை வாகனத்தின் ஓட்டுநரான தாழையூத்தைச் சோ்ந்த நித்தீஷ்குமாா் (25), தாழையூத்து ராம் நகா் சுரேஷ்குமாா் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.விசாரணையில் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞா் (45) என்பவருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இதையறிந்த கலைஞா் விஷம் குடித்தாராம். அவரைகுடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.