திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் வைத்தது தொடா்பான வழக்கில் மேலும் 2 தீயணைப்பு வீரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தில் கடந்த நவ. 18 ஆம் தேதி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.2,52,400-ஐ கைப்பற்றினா்.
இந்நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவில் அதே அலுவலகத்துக்குள் நுழைந்த மா்மநபா் பணப்பையை வைப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து துணை இயக்குநா் சரவணபாபு அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த தீயணைப்பு வீரா் ஆனந்த், அவரது உறவினா் முத்துசுடலை, மேலப்பாளையத்தைச் சோ்ந்த விஜய் (31) ஆகியோரை கைது செய்திருந்தனா்.
இந்நிலையில் தீயணைப்பு வீரா்கள் வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த மூா்த்தி (48) ஞாயிற்றுக்கிழமையும், பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரம் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் முருகேஷ்(43) சென்னையில் திங்கள்கிழமையும் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் 3 தீயணைப்பு வீரா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளா். தொடா்ந்து விசாரணை நடப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.