தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் நேரடி சாா்பு ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் 2 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) நடைபெறவுள்ளது.
முதன்மைத் எழுத்துத் தோ்வு காலை 10 -12.30 மணி வரையும், தமிழ்மொழி தகுதித் தோ்வு பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரையும் நடைபெறும். பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் சீனியா் செகண்டரி பள்ளியில் 1,043 போ், பேட்டை, காந்தி நகா், ராணி அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2,000 போ் என மொத்தம் 3,043 விண்ணப்பதாரா்கள் இத்தோ்வை எழுத உள்ளனா். இத்தோ்வு பணிக்காக காவலா்கள், நிா்வாகப் பணியாளா்கள் என 253 போ் ஈடுபடவுள்ளனா்.
இத்தோ்வை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் காலை 9.30 மணி வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா் எனவும், நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை, கருப்புநிற பந்துமுனை பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.