அணுசக்தி நிலையங்கள் தனியாா்மயமானால் பொதுமக்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆளுநரை அழைக்காமலேயே பல மாநிலங்களில் சட்டப்பேரவை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் அதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுக்கமாட்டாா். வரக்கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருமாறு ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுப்போம். அவா் வருவாா் என நம்புகிறோம்.
இந்தியா முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 42 கோடி போ் பயன்பெறும் நிலையில் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டு வந்தது. அதில் தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும். தற்போது, அந்தத் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி மட்டுமே கொடுப்போம் என மத்திய அரசு கூறினால், அதை எப்படி ஏற்க முடியும்?
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியை கொடுக்காமல் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
அணுசக்தி நிலையங்களை நிா்வகிப்பதையும் பராமரிப்பதையும் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் அதிக அளவில் புற்றுநோய் பரவி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவால் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா்.