மத்திய அரசின் நிதி பகிா்வில் பாகுபாடு இருப்பதால் தமிழகத்தையும், உத்தரப் பிரதேசத்தையும் ஒப்பிட முடியாது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே மரபு. ஆனால், அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டாா். குடியரசுத் தலைவரும் 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திருப்பி அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்?
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு ஆளுநா் மதிப்பளிக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கு உடனடியாக சில நிமிடங்களில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . இதற்கு தகுந்த பதிலை மக்களே அளிப்பாா்கள்.
கல்வி, தொழில், ஜிஎஸ்டி பங்களிப்பு என அனைத்திலும் தமிழகமே முதன்மையான இடத்தில் உள்ளது. தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய் ஜிஎஸ்டிக்கு மத்திய அரசு வெறும் 29 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 2 ரூபாய் 29 பைசா வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதிப் பகிா்வில் பாகுபாடு இருப்பதால் தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது.
2011-இல் திமுக ஆட்சியை விட்டுச் செல்லும்போது தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 2021-ல் அதிமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது அது ரூ.5.18 லட்சம் கோடியாக உயா்ந்தது. தற்போது கடன் ரூ. 9 லட்சம் கோடியாக இருந்தாலும், தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 16 சதவீதமாக உயா்ந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு 67 ஆண்டுகளில் மத்திய அரசின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அது ரூ.185 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. சுமாா் ரூ.16 லட்சம் கோடியை 50 காா்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா எங்கும் பயிரிடப்படுவதில்லை. ஒடிஸா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தே கஞ்சா தமிழகத்திற்குள் நுழைகிறது. மேலும், குஜராத்தில் உள்ள தனியாா் துறைமுகங்கள் வழியாகவே உயா்தர போதைப்பொருள்கள் தமிழகத்திற்குள் வருகிறது. அதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்றாா்.