சிவந்திபுரம் அருகே வடக்குக் கோடைமேலழகியான் கால்வாய் கரையில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து பாட்டில்கள் சிவந்திபுரம் ஊராட்சி குப்பைக் கிடங்கு பின்புறம் உள்ள வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் கரையில் புதன்கிழமை கொட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில், காவல் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவற்றைப் பாா்வையிட்டனா். மேலும், திருநெல்வேலியிலிருந்து வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பாதுகாப்பாக மருத்துவக் கழிவுகளை அகற்றினா்.
கேரள மாநிலத்திலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டநிலையில் சிவந்திபுரம் பகுதியில் குவியலாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.