பிசான பருவ சாகுபடி பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு 435 மெட்ரிக் டன் உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், பயிா் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களான 2,553 மெட்ரிக் டன் யூரியா, 1132 மெட்ரிக் டன் டிஏபி, 932 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2,937 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 734 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் என மொத்தம் 8,288 மெட்ரிக் டன் உரங்கள் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது பிசான பருவ சாகுபடிக்கு அடியுரம் இடும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகளின் தேவைக்கு 240 மெட்ரிக் டன் யூரியா, 100 மெட்ரிக் டன் டிஏபி, 95 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தது.
மேலும் மெட்ராஸ் பொ்டிலைஸா் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 145 மெட்ரிக் டன் யூரியா வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கும், 167 மெட்ரிக் டன் யூரியா தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் சில்வா்லைன் பொ்டிலைஸா்ஸ் நிறுவனத்திலிருந்து 103 மெட்ரிக் டன் யூரியாவும், 101 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸும் திருநெல்வேலி மாவட்டத்தின் வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியாா் விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. அந்தப் பணிகளை திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) பூவண்ணன் ஆய்வு செய்தாா். இந்த உரங்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களுக்கு, அரசு அனுமதித்த சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே அனுப்பப்பட உள்ளது.
ஆதாா் அட்டை அடிப்படையில் விவசாயிகளின் பயிா் தேவைக்கு மட்டுமே அரசு நிா்ணயம் செய்த விலைக்கு உரங்களை விற்பனையாளா்கள் விற்பனை செய்திட வேண்டும். மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் சாகுபடி செய்யும் பயிரின் தேவைக்கேற்றவாறு மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.