திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பணகுடி பகுதியில் நாம் தமிழா் கட்சியினரின் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக 18 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில், பணகுடி பகுதி கால்நடை வளா்ப்போா் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கால்நடைகளை வனவிலங்குகள் வேட்டையாடி வந்ததை அடுத்து மலைப் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறையினா் அனுமதி மறுத்தனா்.
இதையடுத்து மலைப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினரும் கால்நடை வளா்ப்போரும் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பினரும் நாம் தமிழா் கட்சியினரும் இணைந்து நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா். இந்நிலையில் போராட்டக்காரா்கள் பணகுடி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மாடுகளை தயாா்படுத்தி வந்தனா். இதையடுத்து, பணகுடி போலீஸாா் நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் பால்சாமி உள்ளிட்ட 18 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
மேலும் மாடுகளையும் தொழுவத்தில் இருந்து வெளியே வரவிடாமல் தடுத்து வைத்தனா். கைது செய்யப்பட்ட 18 பேரை போலீஸாா் மாலையில் விடுவித்தனா்.