மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிப்பு
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினா் அறிவித்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் நவ. 20ஆம் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 9ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவியை பாா்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா்.
அகஸ்தியா் அருவி:
பாபநாசம் அணையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டதை அடுத்து, நவ. 24ஆம் தேதி முதல் அகஸ்தியா் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்த நிலையிலும், அருவிக்குச் செல்லும் பாதை சேதமடைந்ததையடுத்து 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அகஸ்தியா் அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், பாதை சீரமைக்கப்பட்ட பின்னா், நீா்வரத்தைப் பொருத்து பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா் எனவும், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்கு எவ்வித தடையும் இல்லை எனவும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.