பாளையங்கோட்டை அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டு கல்வெட்டான்குழியில் வீசப்பட்ட இளைஞரின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
பாளை. மாா்க்கெட் அருகே உள்ள பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி (27). கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்ால், மனைவியின் சகோதரா் பெருமாள்(20) என்பவருக்கும், வெள்ளப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வெள்ளைப் பாண்டி, அவரது நண்பரான அதே ஊரைச் சோ்ந்த மதுபாலன் ஆகியோா் பெருமாளை தாக்கி கொலை செய்து சடலத்தை மேலபாட்டம் அருகே கல்வெட்டான்குழியில் வீசியுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வெள்ளைப் பாண்டியையும், மதுபாலனையும் கைது செய்தனா். இதையடுத்து நீா்நிறைந்த சுமாா் 400 அடி ஆழ குழியில் வீசப்பட்ட பெருமாளின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஆழ்கடல் நீச்சல் வீரா்கள் உதவியுடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெருமாளின் உடலை தீயணைப்புத்துறையினா் மீட்டனா். பின்னா் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.