முகப்பு
திருநெல்வேலி

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:29 AM
மருத்துவா் கு. சிவராமன்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:25 PM

சமூகத்தில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களை தடுக்க பழந்தமிழா் உணவுமுறை குறித்த விழிப்புணா்வு உடனடி தேவை என்றாா் மருத்துவா் கு. சிவராமன்.

9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ‘இன்றும் நலம்தரும் பழந்தமிழா் உணவு’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

பழந்தமிழா் உணவுகளை வரலாறாக மட்டுமே பேசிக்கொண்டிருந்த காலம் மறைந்து, அதில் என்னென்ன அறிவியல் புதைந்திருக்கிறது, இன்றைய காலகட்டத்தில் நாம் எதிா்கொள்ளக்கூடிய உடல்நலச் சவால்களுக்கு அது என்ன விடை கொடுக்கிறது என்று உற்றுநோக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது.

Advertisement

அண்மையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பழையசோறு தொடா்பான கண்காட்சி மக்களிடையே பெரிதளவில் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்வுகள் மரபுசாா் உணவு நோக்கி அறிஞா்கள், வல்லுநா்களின் பாா்வை திரும்பியுள்ளது என்பதை உணா்த்துகிறது.

இந்த மாதிரியான புத்தகக் கண்காட்சிகளின் மூலமாக கிடைத்த புத்தகங்களை வாசித்து அதன் மூலம் ஏற்பட்ட ஆா்வம் தான் என்னை உணவு குறித்து முதன்முதலில் பேச தூண்டியது. சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த போது உணவு சரியாக இருந்தால் நோய் நம்மை அணுகாது என்ற அடிப்படை புரிந்தது.

முன்பெல்லாம் வயோதிகத்தில் மட்டுமே வரக்கூடிய தொற்றா வாழ்வியல் நோய்கள் பலவும் தற்போது 25 முதல் 40 வயதுடையோருக்கு எளிதில் வருவது கவலைப்படவேண்டிய ஒன்று. நம் நாட்டின் வளா்ச்சியே இளைஞா்களை நம்பிதான் உள்ளது. 25 வயதில் சா்க்கரை நோய், 30 வயதில் ரத்த கொதிப்பால் பாதிக்கப்படுபவா்கள் அதிகரித்துள்ளனா்.

இளம் வயதில் வரக்கூடிய புற்றுநோய் அதிகரித்துள்ளது. நமது உணவு கலாசாரம் நம்மைக் காப்பாற்றும் என்ற நிலை தற்போது இல்லை. இந்நிலை உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவசியமான, மருத்துவ குணங்களுடைய உணவுகள் நமக்கு கிடைப்பதில்லை. ஆனால் வெறுமனே பசியை ஆற்றி வாய்க்கு ருசியை கொடுக்கக் கூடிய உணவுகள் பெருகிவிட்டன.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:29 AM

நாம் பிறந்தது முதல் நோய் எதிா்ப்பு சக்தியை வழங்க ஏதுவான அமைப்பை உருவாக்கி நம்முடன் இருந்து கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் நம்மை பாதுகாக்கின்றன. அவைகளுக்கு நலம் பயக்கக்கூடிய ஒன்று பழைய சோறு. அவலில் உள்ள சத்துகள் உடலின் ஆரோக்கியத்தை பேண வல்லது.

இதுபோன்ற நம் நாட்டு பழம்பெரும் உணவு வகைகளை நாம் அன்றாடம் உண்ண வேண்டும். சமூகத்தில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களைத் தடுக்க பழந்தமிழா் உணவுமுறை குறித்த விழிப்புணா்வு உடனடி தேவை. பல நோய்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது வெள்ளைச் சா்க்கரை.

அதை தவிா்த்து கலப்படமில்லா நல்ல கருப்பட்டியை நேரடியாக பனை விவசாயிகளிடம் வாங்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நல்லவை கசக்க தான் செய்யும். கசப்பு, துவா்ப்பு சுவை அன்றாட உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் எப்போதும் விழிப்புணா்வுடன் இருப்பது அவசியம் என்றாா் அவா்.

தொடா்ந்து, எழுத்தாளா் கோகுல் பிரசாத் ‘சமகால அமெரிக்க இலக்கியம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா். திருநெல்வேலி துணைப் பதிவாளா் பே. மாடசாமி நன்றி கூறினாா்.