தமிழகத்தில் பெரிய கட்டமைப்பு உள்ளதுபோல பொய்த்தோற்றத்தை பாஜக ஏற்படுத்தி வருகிறது என்றாா் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைத்ததற்கும், காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டியதற்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் என்றாலே பிரதமா் நரேந்திர மோடிக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டுள்ளது. எனினும் அவா்களது முயற்சி தமிழக மக்களிடம் எடுபடாது.
இங்கு பாஜகவுக்கு பெரிய கட்டமைப்பு இருப்பதுபோல் அக்கட்சியினா் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனா். 2026 சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்து கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப்போவதில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 221 தொகுதிகளில் அமைப்புகள் உள்ளன. அதில் சில தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டுப்பெறுவோம். தாமிரவருணியை சீரமைத்து பாதுகாக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆசிரியா்கள் போராட்டத்தால் மாணவா்களின் கல்வி தடைபடாமல் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.