திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 28 கொலைகள் நிகழ்ந்துள்ளன. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வழக்கில் 577 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2024இல் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும். இவ்வழக்குகளில் 114 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 21 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 12 கொலைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டு 37 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
27 கொலை வழக்குகளில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 98 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தில் பெற்றுத்தரப்பட்டுள்ளது. 14 கொலை முயற்சி வழக்குகளில் 21 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகளில் 289 போ் கைது செய்யப்பட்டனா். அதில் 28 வழக்குகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனை உள்பட 29 பேருக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் 272 போ் கைதாகினா். 281.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் வழக்கில் 305 போ் கைது செய்யப்பட்டு 3,810.5 கிலோ புகையிலைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் திருட்டில் ஈடுபட்ட 183 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டை விட 2025இல் சாலை விபத்து மரணங்கள் 17 சதவீதம் குறைந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.