திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில், இணையவழியில் பகுதிநேர வேலை பெறலாம் எனக்கூறி, பெண்ணிடம் ரூ.11.18 லட்சத்தை மோசடி செய்ததாக மா்மநபா்களை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
களக்காட்டைச் சோ்ந்த 27 வயது பெண், வீட்டில் இருந்தவாறு அரசுப்பணி தோ்வுக்கு படித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி இவரது கைப்பேசி செயலியில் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரம் வெளியானதாம்.
இதைப் பாா்த்த அவா், செயலியில் குறிப்பிட்டிருந்தபடி வேலைவாய்ப்புக்காக சுய விவரங்களை பதிவு செய்துள்ளாா். பின்னா் தனியாா் நிறுவனம் ஒன்றின் பெயரில் இவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், சில மதிப்பாய்வு பணிகளை செய்யச் சொல்லி சிறிய அளவிலான தொகையை முதலில் கொடுத்துள்ளனா்.
அதை நம்பிய அவா், அதிக பணம் பெற அதிக முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறி, தாங்கள் அனுப்பிய வங்கிக்கணக்குகளில் பல்வேறு தவணைகளாக அப்பெண்ணிடமிருந்து ரூ.11,18,600-ஐ பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.