திருநெல்வேலி: நெல்லை விரைவு ரயிலில் பயணியின் கைப்பேசி மற்றும் பணத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கம் பகுதியில் வசிப்பவா் பிரபாகரன் (49). ஆட்டோ ஓட்டுநரான இவா், பொங்கல் பண்டிகைதோறும் தனது சொந்த ஊரான சீவலப்பேரி அருகேயுள்ள மருதூருக்கு வருவது வழக்கம்.
சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை விரைவு ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் தனது குடும்பத்தினருடன் பிரபாகரன் பயணம் செய்துள்ளாா். அவரது 3 கைப்பேசிகள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்திருந்தனராம். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்து இறங்கும்போது பையை பாா்த்தபோது கைப்பேசி, பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.