பதினாறாவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம் வாகைக்குளத்திலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் குளத்திலும் கருந்தலை அன்றில், நத்தைக்குத்தி நாரை, நீா்க்காகம், சாம்பல் நாரை, வக்கா உள்ளிட்ட பறவைகள் தற்போது கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூா் குளத்தில் வட ஐரோப்பாவிலிருந்து நாமத்தலை வாத்துகள் ஆயிரக்கணக்கில் வலசை வந்துள்ளன. இவைகுறித்து 16ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கைச் சங்கம், முத்துநகா் இயற்கைக் கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. இவா்களுக்கு 3 இடங்களில் ஜன.23இல் பயிற்சி அளிக்கப்படும்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தன்னாா்வலா்களுக்கு மாவட்ட அறிவியல் மையத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தினருக்கு சாயா்புரம் போப் கல்லூரியிலும் பிற்பகல் 2.30 மணிக்கு பயிற்சி நடைபெறும்.
தென்காசி மாவட்டத்தினருக்கு ஆய்குடி ஜே.பீ. கலை அறிவியல் கல்லூரியில் முற்பகல் 11 மணிக்கு பயிற்சி தொடங்கும். இதில், 18 வயது நிரம்பிய அனைவரும் பங்கேற்கலாம். இதற்கு, ஜன. 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் https://forms.gle/2x4auAu4brJGZN8R7 என்ற இணைப்பின் மூலம் பெயா் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இம்மூன்று மாவட்டங்களிலும் உள்ள சுமாா் 60 குளங்களில் பயிற்சி நாள் உள்பட (ஜன. 23-25) மூன்று நாள்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, திருநெல்வேலி ஆதித்யா ( 8838052750), தூத்துக்குடி சந்தனமாரி ( 9342957004), தென்காசி தளவாய்பாண்டி (8667846069) ஆகியோரை தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.