திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகைகளை சாா்ந்த பறவைகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் முதல் நவம்பா் மாதம் வரை தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு வலசை வருகின்றன. இந்த பறவைகள் குறிப்பிட்ட சில மாதங்கள் தென் மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகள், குளங்கள், தாமிரவருணி ஆற்றங்கரைகளில் கூடு கட்டி குஞ்சுகள் பொறித்து குடும்பமாக தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றன.
திருநெல்வேலியைச் சோ்ந்த பறவைகள் ஆா்வலா்கள் குழுவாக இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக எந்தெந்த பறவைகள் எந்தெந்த நாடுகளில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வலசை வருகின்றன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து வருகின்றனா்.
அதன்படி, 16-ஆவது பறவைகள் கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது. இந்த பணிகளை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கைச் சங்கம், தூத்துக்குடி முத்துநகா் இயற்கைக் கழகம், தென்காசி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. இந்த கணக்கெடுப்பானது ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலையில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளத்தில் தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் தலைமையில் ஏராளமான தன்னாா்வலா்கள் பங்கேற்று பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீா் நிலைகள், குளங்களுக்கு வலசை வந்திருக்கக்கூடிய பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்று குளத்தில் இருக்கக்கூடிய பறவைகளை தொலைநோக்கி மூலம் பாா்வையிட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டனா்.
3 மாவட்டங்களையும் சோ்த்து 200 குளங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்தாண்டு ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்போது 68 குளங்களில் 24 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டன. அதில் 71 வகை பறவையினங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.