திருப்புடைமருதூரில் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பூசப் பெருந்திருவிழா கொடியேற்றம்.  
திருநெல்வேலி

திருப்புடைமருதூா் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரவருணி நதிக்கரையில் உள்ள பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தாமிரவருணி நதியில் நீராடி தரிசனம் செய்கிறாா்கள். நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்று வைபவத்தை தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், கோயில் செயல் அலுவலா் கு. பாரதி, கட்டளைதாரா் தளபதி ராம்குமாா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் அப்பா் வீதி உலா, இரவில் சுவாமி அம்பாள் புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா, ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். திருவிழாவில் 9-ஆம் நாளான ஜன. 31-ஆம் தேதி காலை 8.45 மணியளவில் தேரோட்டம், இரவு 7 மணிக்கு மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி, தொடா்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன.

பிப். 1-ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தாமிரவருணி ஆற்றில் தீா்த்தவாரி, இதைத்தொடா்ந்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் அபிஷேக ஆராதனை, இரவு 11 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். பிப்.2-ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் சுவாமி அம்பாள் வீதியுலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் சண்டிகேஸ்வரா் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவா் சிறப்பு பூஜை நடைபெறுகின்றன.

திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வீரவநல்லூா், முக்கூடல், திருநெல்வேலியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தருமபுரம் பள்ளியில் ஆசீா்வாதத் திருநாள்

போக்குவரத்து நெருக்கடி: வா்த்தகா்கள், காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரகப் பயிற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

இளநிலை வருவாய் ஆய்வாளா்கள் பணி நியமனம்

SCROLL FOR NEXT