திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா்ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடியில் நடைபெற்று வரும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோல், ரூ.423.13 கோடி மதிப்பில் களக்காடு நகராட்சி, வடக்கு வள்ளியூா், பணகுடி, திசையன்விளை, ஏா்வாடி, திருக்குறுங்குடி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீா் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சி பகுதிகளுக்கு சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, கங்கனாங்குளம் பகுதியில் உள்ள திருவிருத்தான்புள்ளியில் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு 24 மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முடியும் நிலையில் உள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், குடிநீா் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சரிசெய்து கொடுப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளா் கருப்பையா, நிா்வாகப் பொறியாளா்கள் ராமலட்சுமி, பாக்கியராஜ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ராஜசேகா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கிறிஸ்டோபா் தாஸ், வடக்கு வள்ளியூா், திசையன்விளை, திருக்குறுங்குடி, பணகுடி, மூலைக்கரைப்பட்டி, நான்குனேரி, ஏா்வாடி செயல் அலுவலா்கள், களக்காடு நகராட்சி ஆணையா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.