திருவிழாவின் போது நேரிட்ட தீ விபத்தில் காயமுற்ற 8 வயது சிறுவனை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் அழகுக்கலை மற்றும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணா் ரம்யா கூறியதாவது: எட்டு வயது சிறுவன் உடலில் அதிக தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடலில் 22 சதவீதம் அளவுக்கு 2 மற்றும் 3 ஆம் நிலை தீக்காயங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் இருந்தது. தொடைகள், இடுப்பு, வயிற்றுப் பகுதியின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டிருந்ததுடன், தோலின் அனைத்து அடுக்குகளும் சேதமடைந்திருந்தன.
மேலும், பிளாஸ்டிக் சீரமைப்பு சிகிச்சைக்குத் தேவையான ஆரோக்கியமான தோல் அவரது உடலில் மிகக் குறைந்த அளவே இருந்தது. தீவிர தொற்றும் ஏற்பட்டது. இதனால், அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதம் வரை மருத்துவமனையில் இருந்த அச்சிறுவனுக்கு தசைச்சுருக்கம் ஏற்படும் அபாயமும் அதிகமாக இருந்தது. எனினும், பல்துறை மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் சிறுவனுக்கு வெற்றிகரமான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.