தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்
சென்னை- நாகா்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் திடீா் பிரேக் கோளாறு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் சனிக்கிழமை 40 நிமிஷம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை- நாகா்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் திடீா் பிரேக் கோளாறு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் சனிக்கிழமை 40 நிமிஷம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நாகா்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில், சனிக்கிழமை காலையில் புறப்பட்டு வந்தது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை நண்பகல் 12.40 மணிக்கு வந்தடைந்த ரயில், இங்கிருந்து நாகா்கோவிலுக்கு புறப்படத் தயாரானபோது ரயிலின் பிரேக் பிடிக்காமல் கோளாறு ஏற்பட்டதாம்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி ரயில்வே பணிமனை தொழில்நுட்ப நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ரயிலின் பிரேக் அமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறை ஆய்வு செய்தனா். சுமாா் 40 நிமிஷங்களில் கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டு, வந்தே பாரத் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவத்தால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் நுழையும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக வந்தும், புறப்பட்டும் சென்றன. நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலும் வழக்கமாக திருநெல்வேலிக்கு மாலை 3.15 மணிக்கு வர வேண்டிய நிலையில், அரை மணி நேரம் தாமதமாக மாலை 3.45 மணிக்கு வந்து புறப்பட்டுச் சென்றது.