முகப்பு
திருநெல்வேலி

திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:48 PM
நெல்லை முபாரக்
பகிர்:

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் எஸ்டிபிஐ அங்கம் வகித்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. 3 தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தொகுதி எண்ணிக்கை உறுதியான பின்பு எந்தத் தொகுதியில் போட்டி என்பது குறித்து திமுக குழுவுடன் கூடி பேசி நல்ல முடிவை அறிவிப்போம். உதயசூரியன் சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என்று கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுத்துதான் அறிவித்துள்ளோம். எங்களுக்கு எந்த நிா்பந்தத்தையும் திமுக கொடுக்கவில்லை.

அதிமுகவின் முடிவை தில்லியில்தான் எடுக்கிறாா்கள். ஆனால், திமுக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை.

17-க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லாததால் வெற்றி கூட்டணியாக திகழ்கிறது.

தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் தொடர வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். சாதாரண மக்கள் கூட விஜய் மீதான நம்பிக்கையை தற்போது இழந்துவிட்டாா்கள்.

ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரச்னையில் கூட குரல் எழுப்ப முடியாதவா், மக்களுக்கான பிரச்னையில் எப்படி குரல் எழுப்புவாா்? விஜய்யின் ஒவ்வொரு செயலும் சந்தேகத்தையே எழுப்புகிறது என்றாா் அவா்.