முகப்பு
கன்னியாகுமரி

வன உயிரினப் பாதுகாப்புக்கு ரூ.50 கோடியில் திட்டம்: முதன்மை செயலர் தகவல்

வன உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.50 கோடியில் புதிய திட்டம் 

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

வன உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.50 கோடியில் புதிய திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது என, தமிழக அரசு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின்  முதன்மை செயலர் சி.வி.சங்கர் தெரிவித்தார்.

மாநில வன உயிரின வாரத்தையொட்டி, கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் தொடங்கிவைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோடைக் காலங்களில் வன உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க கடந்த ஆண்டு ரூ.20 கோடியே 87 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்போது நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில்  திட்டம் தயாரிக்கப்பட்டு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் சிறந்த முறையில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க  கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயப் பயிர்களைப் பாதுகாக்க யானை புகா குழிகளை கடந்த ஆண்டைவிட 4  மடங்கு அதிகமாக அமைத்துள்ளோம் என்றார் அவர்.

இளைஞர்களுக்கான மாரத்தான் போட்டி கன்னியாகுமரியில் தொடங்கி நாகர்கோவில்  அண்ணா விளையாட்டரங்கத்திலும், மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி  கன்னியாகுமரியில் தொடங்கி வழுக்கன்பாறையிலும் நிறைவடைந்தன.

மாரத்தான் போட்டி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன்  தலைமை வகித்தார். முதன்மை தலைமை வனப் பாதுகாப்பாளர் கெüதம் டே,  மாவட்டத் தலைமை வன உயிரினக் காப்பாளர் குணசேகரன், திருநெல்வேலி வனப்  பாதுகாப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் ரிக்டோ சிறியாக், உதவி வன அலுவலர் ஜெயா பேரின்பகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்  விஜயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், மாவட்ட உடற்கல்வி  ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.