முகப்பு
கன்னியாகுமரி

மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: களியக்காவிளையில் ஆலோசனைக் கூட்டம்

களியக்காவிளையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலகட்டப் போராட்டங்கள் நடத்துவது

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

களியக்காவிளையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலகட்டப் போராட்டங்கள் நடத்துவது என இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், களியக்காவிளையில் மேம்பாலம் அமைக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டால் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது எனக் கூறி இத்திட்டத்துக்கு எதிராக களியக்காவிளை நகர் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு, சாலையை அகலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் களியக்காவிளையில் உள்ள தனியார் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவர் மருத்துவர் பான்ஸ் ஜாய் தலைமை வகித்தார். செயலர் ஜெகதீசன், பொருளாளர் எஸ். மாகீன் அபுபக்கர், துணைச் செயலர்கள் மு. ரிபாய், டி. வின்சென்ட், ஒருங்கிணைப்பாளர் இ. பத்மநாபபிள்ளை, சி.டி. ஆல்பர்ட்சிங் மற்றும் வியாபார நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், களியக்காவிளையில் மேம்பாலம் அமைப்பதால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர், துறை பொறியாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்குவது, இத் திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது, தொடர்ந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை உள்ளடக்கி கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →