முகப்பு
கன்னியாகுமரி

கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளரை தாக்கியதாக 4 எம்எல்ஏக்கள் உள்பட 15 பேர் மீது புகார்

நாகர்கோவிலில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலக உதவியாளரை தாக்கியதாக 4 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 29 மார்ச், 2018 at 5:51 AM
பகிர்:

நாகர்கோவிலில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலக உதவியாளரை தாக்கியதாக 4 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
குமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரை திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்துக்கு அவர்கள் வந்தபோது சரியான மரியாதை அளிக்கப்படவில்லை என கூறி, இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜாவிடம் எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அலுவலகத்தில் இருந்த நாற்காலிகளை சிலர் தூக்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இந்த பிரச்னையின்போது அலுவலக ஊழியர் சுரேஷ் தாக்கப்பட்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் சுரேஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். அதோடு, அதிகாரி தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, கூட்டமாக வந்ததால் எம்எல்ஏக்களை கவனிக்கவில்லை என்றும், அதற்காக வருந்துவதாகவும் இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா கூறினார். 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனது அலுவலக உதவியாளரை தாக்கியதாகவும், அலுவலகத்தில் இருந்த பொருள்களை உடைத்ததாகவும், எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ், ஆஸ்டின், ராஜேஸ்குமார் உள்பட 15 பேர் மீது இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா, நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.