கன்னியாகுமரி

அருமனை அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு: அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

DIN

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே தனியார் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டியதாக அதே பள்ளி ஆசிரியையின் கணவரான அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். 
அருமனை அருகேயுள்ள சிதறால் பகுதியில் தனியார் சிபிஎஸ்இ மேல்நிலைப்  பள்ளி உள்ளது. பள்ளியின் தாளாளர் ராஜேஷ். இங்கு 10,  பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு காலை 7 மணிக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை சிறப்பு வகுப்புகளுக்காக மாணவர்-மாணவிகள் வந்துகொண்டிருந்தனர். அப்போது இப்பள்ளி ஆசிரியையின் கணவரும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநருமான ஜெயன் (48) பள்ளி வளாகத்துக்குள் திடீரென புகுந்தார்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 வேன்களை சேதப்படுத்திய அவர், வளாகத்திலுள்ள வீட்டுக்குள் புகுந்து பொருள்களையும்,  ஜன்னல்களையும் சேதப்படுத்தினார். தொடர்ந்து, அங்கு நின்றிருந்த திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிகள் நந்தனா, வர்ஷா ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றாராம்.
அவரை அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை ஊழியர் ஞானமுத்து (65), கூலித் தொழிலாளி சுதீர் (45) ஆகியோர் தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்களையும் ஜெயன் வெட்டியுள்ளார். 
சம்பவங்களைப் பார்த்த மாணவர்-மாணவிகள் அலறியடித்தபடி ஓடினர். அங்கிருந்த சிலர் ஜெயனை தடுத்து நிறுத்தி அரிவாளைப் பறித்ததுடன், அவரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து, போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அருமனை போலீஸார் வந்து ஜெயனைக் கைது செய்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.  
காயமடைந்த 4 பேரும் மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT