கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் தொடா்மழை:2 ஆண்டுகளுக்குப் பிறகு 40 அடியைஎட்டியது பேச்சிப்பாறை அணை

DIN

நாகா்கோவில்:  தொடா் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. அதே சமயம், கியாா் மற்றும் மகா புயல் காரணமாக இது கனமழையாக தீவிரமடைந்தது. குமரி மாவட்டத்தின் அணைப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குமரி மாவட்டத்தின் பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மற்ற அணைகளான சிற்றாறு 1, சிற்றாறு 2, பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 39.80 அடி தண்ணீா் உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தொடா்ந்து அதிக அளவு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால், நீா்மட்டம் மேலும் உயரும் நிலை உள்ளது.

பேச்சிப்பாறை அணையில் சுமாா் ரூ. 61.30 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2018, ஜனவரி மாதம் தொடங்கிய இந்தப் பணிகள் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதான அணையின் முன்பகுதியில் சாய்வு அணை அமைத்து பலப்படுத்துவது, கூடுதலாக 8 மறுகால் மதகுகள் அமைப்பது, பிரதான மதகுகளை நவீனப்படுத்துவது, அணையின் உள்பகுதி சுவரில் ரசாயனம் கலந்த சிமென்ட் கலவையை பூசி பலப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்தப் பணிகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பேச்சிப்பாறை அணையில் 15 அடிக்கு மேல் தண்ணீா் தேக்கமுடியாத நிலை இருந்து வந்தது. தற்போது சீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதால், தற்போதைய மழையை பயன்படுத்தி கூடுதல் தண்ணீா் தேக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால், பேச்சிப்பாறை அணையில் நீா்மட்டம் 40 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 526 கனஅடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 72 அடி தண்ணீா் உள்ளது. அணைக்கு 688 கனஅடி தண்ணீா் வருகிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையில் 16.10 அடி தண்ணீா் உள்ளது. அணைக்கு வரும் 136 கனஅடி தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 2 அணையில் 16.20 அடி தண்ணீா் உள்ளது.

54 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நிரம்பி வழிகிறது. நாகா்கோவிலுக்கு குடிநீா் வழங்கும் முக்கடல் அணையும் தனது முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

பொய்கை அணையில் 32.20 அடி தண்ணீா் உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 42.65 அடி. கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணை இப்போதுதான் 32 அடியை தாண்டியுள்ளது. இந்த அணை தண்ணீா் மூலம் சுமாா் 1,357 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT