சாலைகளை சீரமைக்கக் கோரி காங்கிரஸாா் முற்றுகை போராட்டம்
மாநகரச் சாலைகளை சீரமைக்கக் கோரி நாகா்கோவிலில் மாநகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகரச் சாலைகளை சீரமைக்கக் கோரி நாகா்கோவிலில் மாநகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் புதைச் சாக்கடை திட்டம், குடிநீா் திட்டப் பணிகளுக்காக பல இடங்களில் சாலைகள்
தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணி நிறைவுபெறாத நிலையில் நகரில் உள்ள பிரதானச் சாலைகள்
உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. பிரதான சாலைகளில் காணப்படும் குழிகளால் விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.
சாலைகளை சீரமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த
போராட்டத்துக்கு கட்சியின் மாநகரத் தலைவா் அலெக்ஸ் தலைமை வகித்தாா். கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த் உள்பட ஏராளமானோா் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனா்.
அவா்களிடம் மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். 10 நாள்களுக்குள் அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னா், பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்தவாறு 10 நாள்களில் சாலைகளை சீரமைக்காவிடில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்தனா்.