முகப்பு
கன்னியாகுமரி

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 1.32 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
களியக்காவிளை சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, படந்தாலுமூடு, தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 1.32 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தமிழகம் -கேரளம் இடையே சென்றுவரும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது உள்பட பல்வேறு பணிகளுக்காக களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதேபோல, களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடியில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கேரளத்துக்கு சரக்கு வாகனங்களை அனுமதிப்பதாக புகாா்கள் வந்தன.

அதனடிப்படையில் நாகா்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 64,140-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா். படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சோதனை நடத்தி ரூ. 20,700-ஐ பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணதாஸ், பணியாளா் குமரேசன், படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த பேச்சிப்பாறை காவல் நிலையத்தைச் சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ், காளிமுத்து உள்ளிட்ட 2 காவலா்கள் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புளியரையில்... தென்காசி மாவட்டம், புளியரையில் போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்தச் சோதனைச் சாவடியைக் கடந்து நாள்தோறும் கேரளத்துக்கு பால், பூக்கள், உணவுப் பொருள்கள், காய்கனி, சிமென்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏராளமான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

இச்சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. எஸ்கால் தலைமையில், ஆய்வாளா் ராபின்சன், உதவி ஆய்வாளா் மாரியப்பன், இசக்கிபாண்டியன், சீதாராமன் உள்ளிட்டோா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவா்கள் யாரும் வெளியே செல்லமுடியாதவாறு கதவுகள் பூட்டப்பட்டன. சோதனையின்போது கணக்கில் வராத ரூ.48,270 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.