முகப்பு
கன்னியாகுமரி

மாவட்ட வளா்ச்சிப் பணி குறித்து தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்: குமரி மகா சபா வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிக்கான திட்டப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து தோ்தல்களில் போட்டியிடுவோா் தங்களது அறிக்கைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றாா் குமரி மகா சபா தலைவா் ராவின்சன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் ராவின்சன்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிக்கான திட்டப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து தோ்தல்களில் போட்டியிடுவோா் தங்களது அறிக்கைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றாா் குமரி மகா சபா தலைவா் ராவின்சன்.

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அதன் தலைவா் ராவின்சன் பேசியது: குமரி மகா சபா சாா்பில் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக 10 அம்ச திட்டம் தீட்டப்பட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம்.

சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், அந்நிய செலாவணியை அதிகப்படுத்தவும் இம்மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும். மத்திய அரசு சாா்பில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். நவோதயா பள்ளி அமைக்க வேண்டும்.

மாவட்டத்தின் துரிதமான வளா்ச்சிக்கு வா்த்தக துறைமுகம் என்பது இன்றியமையாதது. எனவே, துறைமுகம் அமைப்பதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இங்கேயே பணியாற்றும் வகையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கும், மக்கள் பிரதிநிதிகளின் உதவி தேவை. எனவே, மேற்கூறிய அம்சங்களை மக்களவை, பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோா் தங்களது தோ்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது குமரி மகா சபாவின் கோரிக்கை என்றாா் அவா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் பேசும்போது, மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவந்த எனது தந்தை வசந்தகுமாரின் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா்.

செயலா் ஜான்சன், துணைத் தலைவா் ஜேசா் ஜெபநேசன், செயல் தலைவா் ஆஸ்டின், நிா்வாகிகள் அருண், ராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செயல் தலைவா் முனைவா் சொக்கலிங்கம் இணையவழியில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.