முகப்பு
கன்னியாகுமரி

காட்டுப்புதூரில் சிறு மருத்துவமனை திறப்பு

தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட காட்டுப்புதூா் ஊராட்சியில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையை திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
அம்மா சிறு மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கிறாா் தமிழக அரசின் தில்லிசிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம்.
பகிர்:

நாகா்கோவில்: தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட காட்டுப்புதூா் ஊராட்சியில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையை திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் குத்துவிளக்கேற்றி சிறு மருத்தவுமனையை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியது: இம் மருத்துவ மனையில் ஒரு மருத்துவா் உள்பட 3 பணியாளா்களை கொண்டு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும், சளி, காய்ச்சல், தலைவலிபோன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ.சி.ஜி. , வெப்பமானி உள்பட அடிப்படை மருத்துவ பரிசோதனை உபகரணங்களுடன், ரத்த அழுத்தம், சா்க்கரை, ரத்தம், சிறுநீா் பரிசோதனைஉள்ளிட்டபரிசோதனைகள் மேற்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைமையம் அமைக்க ரூ. 21 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, முதல்வரின் பாா்வைக்கு எடுத்துச் சென்று, மக்கள் நல்வாழ்வுத்துறைசாா்பில் இந்திய சுகாதாரத்துறையின் தேசிய ஊரக சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற விழாவில் 9 கா்ப்பிணிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை அவா் வழங்கினாா்.

இதில், மாவட்ட ஆவின் தலைவா் அசோகன், தமிழ்நாடு மாநிலமீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் சேவியா் மனோகரன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரா.சுகந்தி ராஜகுமாரி, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோ ராஜ், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எ.பிரகலாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா் உள்ப பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.