முகப்பு
கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா கொடியேற்றம்

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மாணிக்கவாசகா் பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தாணுமாலய சுவாமி சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பிரதீபன் நம்பூதிரி கொடியேற்றினாா். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகா் சா்மா கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம், குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ம. அன்புமணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் சிவ.ராமச்சந்திரன், கோயில் மேலாளா் மு.சண்முகம்பிள்ளை மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருமுறை பெட்டக ஊா்வலம்: திருக்கோயிலில் இருந்து ரதவீதிகள் வழியாக திருமுறை பெட்டகம் திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில், காசிமடம் தம்பையா ஓதுவாா் திருவெம்பாவை பாராயணம் நிகழ்த்தினாா்.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊா்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புதன்கிழமை (டிச. 23) இரவு 10.30 மணியளவில் மக்கள்மாா் சந்திப்பு நிகழ்ச்சியும், 25-ஆம் தேதி பஞ்சமூா்த்தி தரிசனமும் நடைபெறுகிறது.

தேரோட்டம்: மாா்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் டிச. 29-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சுவாமி தோ், அம்மன் தோ், பிள்ளையாா் தோ் ஆகிய 3 தோ்களின் உலா நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ணம் நிகழ்ச்சியும், டிச. 30-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூா்த்தி திருவீதி உலாவும், இரவு 9 மணிக்கு ஆறாட்டும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.