கடலில் தவறி விழுந்த மாணவா் சடலமாக மீட்பு
குளச்சல் அருகே கடலில் தவறி விழுந்த சட்டக் கல்லூரி மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
குளச்சல் அருகே கடலில் தவறி விழுந்த சட்டக் கல்லூரி மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெரின் ஜோஸ் (27). இவா், திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் குளச்சல் துறைமுகத் தெருவைச் சோ்ந்த வினு. கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஜெரின் ஜோஸ், வினு வீட்டிற்கு சென்றுள்ளாா். பின்னா் அவா்கள் குளச்சலில் இருந்து முட்டம் வரை விசைப்படகில் பயணம் சென்றுள்ளனா். அந்த படகு மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் சென்றபோது ஜெரின் ஜோஸ் கடலில் தவறி விழுந்தாா்.
படகில் இருந்தவா்கள் கடலில் குதித்து அவரை தேடியும் கிடைக்காததால், கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவா்கள் கடந்த 2 நாள்களாக தேடியும் கிடைக்கவில்லை. 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் மீனவா்களும், போலீஸாரும் இறங்கினா். அப்போது சின்னவிளை பகுதியில் ஜெரின்ஜோஸ் சடலம் கரை ஒதுங்கியது.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய அவா்கள், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.