திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இந்து அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இந்து அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கோயிலில் கடந்த 2005ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக மந்த கதியிலே பணிகள் நடைபெற்று வருகின்றன.
400 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்து அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் கோயிலில் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: புனரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ரூ. 1.58 கோடி மதிப்பில் உபயதாரா் மூலமாக கூடுதலாக பல பணிகள் நடத்த திட்டம் உள்ளது. மியூரல் ஓவியம் வரையும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். கொடி மரம் நிறுவும் பணியும் துரிதப்படுத்தப்படும் என்றாா் அவா்.
ஆய்வில் போது, திருவட்டாறு வட்டாட்சியா் அஜிதா, கோயில் தந்திரி சஜீத் சங்கரநாராயணரு, கோயில் மேலாளா் மோகன் குமாா், ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், பொறியாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.