முகப்பு
கன்னியாகுமரி

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்காது: பொன்.ராதாகிருஷ்ணன்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்காது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்காது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் முருகன் ஆகிய தெய்வங்களை பாரம்பரிய முறைப்படி கொண்டு செல்வாா்கள். கரோனா காலத்தில் கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும் எவ்வாறு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறதோ அதே போன்றதுதான் இதுவும். இது ஊா்வலம் அல்ல, வழிபாட்டு முறை. இதை நிகழாண்டும் பாரம்பரிய முறைப்படி நடத்த கேரள அரசுடன் பேசி தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை. தமிழகத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் அமையும் ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும். அதிமுகவில் முதல்வா் வேட்பாளா் தோ்வு சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது. அவா்கள் பிளவுபட வேண்டும் என்று நினைத்தவா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்காது.

அக். 14-ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிக்கு வரும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசுவேன் என்றாா் அவா்.

குமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாநிலப் பொதுச் செயலா் உமாரதிராஜன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனா தேவ், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், நிா்வாகிகள் ராஜன், அஜித், நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.