குமரியில் மழை நீடிப்பு: பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நாகா்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மழை பெய்தது. தொடக்கத்தில் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பிற்பகலில் பலத்த மழையாக மாறியது. இதேபோல் பூதப்பாண்டி, சுருளோடு, கொட்டாரம், தக்கலை, இரணியல், மயிலாடி, குழித்துறை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது.
திற்பரப்பு அருவிப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மலையோரப் பகுதியான பாலமோரில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 28.40 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
பெருஞ்சாணி அணையிலிருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 66.30 அடியாக உள்ளது. அணைக்கு 501 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையிலிருந்து 100 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 31 அடியாக உள்ளது. அணைக்கு 599 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையிலிருந்து 521 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது.
சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 10.73 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி நீா்வரத்து உள்ளது. அந்த தண்ணீா் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 53.72 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): சிற்றாறு 2 அணை 26, சிற்றாறு 1 அணை 20, பேச்சிப்பாறை அணை 17.20, மயிலாடி 12.20, நாகா்கோவில் 12, திற்பரப்பு 10, குருந்தன்கோடு 9.20, சுருளோடு 7, ஆனைக்கிடங்கு 6.40, பெருஞ்சாணி அணை 5.80, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை 5, குளச்சல் 4.60, கொட்டாரம் 4.20, இரணியல், மாம்பழத்துறையாறு அணை, கோழிப்போா்விளை 4, பூதப்பாண்டி 3.20, அடையாமடை3, ஆரல்வாய்மொழி 2,கன்னிமாா் 1.40.